வேலூரில் நடந்த தொடர் கொள்ளையில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கும்பல்
வேலூரில் நடந்த தொடர் கொள்ளையில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மார்க்கபந்துவின் மகன்கள் எழில்மாறன், புகழேந்தி. எழில்மாறன் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். புகழேந்தி வழக்கறிஞராக இருக்கிறார். இவர்கள் வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் வசித்து வருகிறார்கள். அதேபோன்று டாக்டர் அப்பு என்பவரும் அதேப்பகுதியில் வசித்து வருகிறார்.
இவர்கள் கடந்த 3-ந் தேதி இரவு தரைத்தளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்கினர். இந்த நேரத்தில் மர்ம நபர்கள், ஆட்கள் தூங்கிக்கொண்டிருந்த அறைகளை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு மற்ற அறைகளில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர்.
காலையில் எழுந்து பார்த்தபோது அறைகளின் கதவு பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் வெளியே வந்தனர். அதேபோன்று தொழில் அதிபர் ஜெகநாதன் என்பவருடைய வீட்டிலும் கொள்ளையடித்து சென்றனர். 4 வீடுகளிலும் ரூ.20 லட்சத்துக்கும்மேல் நகை,பணம் கொள்ளைப்போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சத்துவாச்சாரியில் நடந்த தொடர்கொள்ளை சம்பவம் குறித்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், ஸ்ரீலிசா ஸ்டெபேலா தெரேசா (பயிற்சி), இன்ஸ்பெக்டர்கள் திருமால், பார்த்தசாரதி ஆகியோரிடம், கொள்ளை சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கொள்ளை சம்பவம் குறித்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் உருவம் பதிவாகி உள்ளது. அவர்கள் முகத்தை துணியால் மறைத்து கட்டியிருப்பதால் அடையாளம் காணமுடியவில்லை.
மேலும் இதுதொடர்பாக கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி உள்ள கைரேகையும், பழைய குற்றவாளிகளின் கைரேகையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அதில் உள்ளூர் குற்றவாளிகளின் கைரேகை எதுவும் ஒத்துப்போகவில்லை.
எனவே கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் பக்கத்து மாவட்டங்கள், சித்தூர் பகுதிகளில் உள்ள குற்றவாளிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏற்கனவே 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் கூடுதலாக 30 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story