மெஞ்ஞானபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை குடிநீர் சீராக வினியோகம் செய்ய கோரிக்கை


மெஞ்ஞானபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை குடிநீர் சீராக வினியோகம் செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2019 3:45 AM IST (Updated: 5 Jun 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் அருகே பரமன்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மெஞ்ஞானபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள பரமன்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட என்.எஸ்.கே தெரு, சிங்கராயபுரம் தெரு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலமாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் இந்த பகுதி பொதுமக்கள் ஆண்களும், பெண்களும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் பரமன்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு இந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சித்துறை அதிகாரிகள் வரவில்லை என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் வெகுநேரம் வரை அதிகாரிகள் யாரேனும் வராததால், நாளை (அதாவது இன்று) திருச்செந்தூர் உதவி கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்து கலைந்து சென்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் இதே போல் போராட்டம் நடைபெற்றது அப்போது உடன்குடி துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பகுதியில் உள்ள அடிபம்புகளை சரிசெய்து தருவதாகவும், சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தருவதாகவும் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story