மாவட்ட செய்திகள்

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் டெல்டாவில், வெளுத்து வாங்கும் வெயில் மழைக்கு ஏங்கும் பொதுமக்கள் + "||" + Agni star ended Later on the Delta, the people who breathe in the sunlight

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் டெல்டாவில், வெளுத்து வாங்கும் வெயில் மழைக்கு ஏங்கும் பொதுமக்கள்

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் டெல்டாவில், வெளுத்து வாங்கும் வெயில் மழைக்கு ஏங்கும் பொதுமக்கள்
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் டெல்டா பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் மழைக்கு ஏங்கி வருகின்றனர்.
தஞ்சாவூர்,

விவசாயத்திற்கு நீர் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வெயிலும் மிகவும் அவசியமானது. வியர்வையின் மூலம் உடல் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வு வெயில் காலத்தில் அதிகம் நடக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சு என்பது பழமொழி. அதேபோல வெயிலின் தாக்கம் அளவுக்கு மீறி இருப்பதால் டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாடு திண்டாட்டமாக இருக்கிறது.


தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அதிலும் கோடைகாலம் தொடங்கிய பிறகு வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் உச்சத்தை எட்டியது. வேறு வழியில்லாமல் வெளியில் செல்ல வேண்டியவர்கள் குடையை பிடித்துக்கொண்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. பெண்கள் தங்கள் ஆடைகளால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வெளியில் செல்லும் நிலை ஏற்பட்டது. கடும் வெயிலோடு அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

கோடை வெயிலின் உச்சக்கட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கியது. இந்த கால கட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 29-ந் தேதியுடன் முடிவடைந்தது.

அப்பாடா... அக்னி நட்சத்திரம் முடிவடைந்து விட்டது. இனிமேல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என பொதுமக்கள் எண்ணினர். அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. இதனால் வானிலை மையம் அறிவித்தபடி வெயிலின் தாக்கம் குறையும் என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால் கத்திரி வெயில் முடிவடைந்த பின்னரும் வெயிலின் தாக்கம் சிறிதளவு கூட குறையவில்லை. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. இரவிலோ ஒரே புழுக்கமாக உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். வெளியில் சென்றுவிட்டு வியர்வையில் நனைந்தபடி வீட்டிற்கு வந்து மின்விசிறியின் கீழே அமர்ந்தால் அங்கேயும் வெப்பக்காற்று வீசுகிறது. இதனால் பலர் தங்களது வீடுகளில் ஏ.சி., ஏர்கூலர் போன்ற குளிர் சாதனங்களை பொருத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெயில் கொடுமைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். மனிதர்கள் மட்டும் அல்லாது விலங்குகளும் கொளுத்தும் வெயிலால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன. ஆடு, மாடுகள் சாலை யோரத்தில் உள்ள மரங்களின் நிழல் அல்லது பெரிய கட்டிடங்களின் நிழலில் தஞ்சம் அடைவதை காண முடிகின்றது.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த ஆண்டு கோடை மழை பெய்தது. ஆனால் இந்த ஆண்டோ இதுவரையில் கோடையில் ஒரு மழை கூட பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்களை தவிர அண்டை மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தின் தாக்குதலில் இருந்து மக்களை ஓரளவுக்கு காத்து வருகிறது.

இதனால் எப்போது மழை பெய்யும்? எப்போது இந்த வெயில் கொடுமையில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்? என்று டெல்டா பகுதி மக்கள் மழைக்காக ஏங்கி வருகின்றனர்.