தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்; அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்


தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்; அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2019 11:15 PM GMT (Updated: 5 Jun 2019 7:11 PM GMT)

உடுமலை அருகே தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனை செய்த தாமதம் ஆனதால் அவருடைய உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

உடுமலை,

உடுமலையை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்னிமலைபாளையத்தைச்சேர்ந்தவர் வீரமுத்து ( வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வீரமுத்துக்கு குடிபழக்கம் இருந்ததால் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அதனால் சரண்யா கோபித்து கொண்டு கடந்த 6 மாதங்களுக்குமுன்பு குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று குடியிருந்து வருகிறார். வீரமுத்து சென்னிமலை பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வீரமுத்து குழந்தைகளை பார்க்கச் சென்றால், குழந்தைகளை பார்க்க விடாமல் அவருடைய மனைவி தடுத்து திருப்பி அனுப்பி விடுவதாகக் கூறப்படுகிறது. அதனால் வீரமுத்து மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது பெற்றோர் வீட்டில் வீரமுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்ததம் உடுமலை போலீசார் விரைந்து சென்று வீரமுத்துவின் உடலை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்கு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு வீரமுத்துவின் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து வீரமுத்துவின் தந்தை பரமன் கொடுத்தபுகாரின்பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் வீரமுத்துவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் நேற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வீரமுத்துவின் உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

அப்போது ஆஸ்பத்திரிக்குள் யாரும் உள்ளே வராதபடி ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஆஸ்பத்திரி கதவை பூட்டி உள்புறமாக பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . இது பற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். வீரமுத்துவின் உறவினர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்திவந்த நிலையில் பிற்பகல் 2.45 க்கு பிறகு பிரேதபரிசோதனைக்கு, டாக்டரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story