பல்லடம் அருகே 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி மீட்பு


பல்லடம் அருகே 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி மீட்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்தவர் 4 மணி நேரம் குழாய் பிடித்து கொண்டு போராடியதால் உயிர் தப்பினார்.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே செம்மாண்டம்பாளையம்புதூரை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவருடைய மகன் மணி(வயது 52). விவசாயி. இவருடைய மனைவி பாலாமணி(45). இவர்களது மகன் மோகனுக்கு திருமணம் ஆகி விட்டது.

பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் நள்ளிரவு மணி தனது தோட்டத்துக்கு சென்றார். அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா? என எட்டி பார்த்து உள்ளார். அப்போது தவறி அவர் கிணற்றுக்குள் விழுந்து உள்ளார்.

இதற்கிடையே நேற்று காலையில் நள்ளிரவு தோட்டத்துக்கு சென்ற தனது கணவரை காணாததால் அவருடைய மனைவி பாலாமணி மற்றும் உறவினர்கள் அவரை தேடி தோட்டத்துக்கு வந்தனர். அங்கு தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்டு உள்ளது.

இதையடுத்து அவர்கள் தோட்டத்து கிணற்றை எட்டி பார்த்தனர். அங்கு கிணற்றுக்குள் தண்ணீரை வெளியேற்றும் மோட்டார் குழாயை பிடித்து கொண்டு மணி சத்தம் போட்டு கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) கார்த்திகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கி, விவசாயி மணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி அவரை மீட்டனர். அதிகாலை 3 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை சுமார் 4 மணி நேரம் தண்ணீர் குழாயை கெட்டியாக மணி பிடித்து இருந்ததால் உயிர் தப்பினார். 60 அடி ஆழ கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் இருந்தது.

மீட்கப்பட்ட மணியை அவரது உறவினர்கள் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்கள். ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்களை மணியின் மனைவி மற்றும் உறவினர்கள் பாராட்டினார்கள்.

Next Story