உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை; சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது


உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை; சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 6 Jun 2019 4:00 AM IST (Updated: 6 Jun 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

உடுமலை,

உடுமலையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது.அனல்காற்று வீசியது. இந்த நிலையில் மாலை 3.30 மணிக்கு பிறகு வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. 4 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இடி,மின்னலுடன் சுமார் ஒருமணிநேரம் பலத்த மழை கொட்டியது. அதனால் உடுமலை பழைய பஸ் நிலையம் அருகே பொள்ளாச்சி சாலையில் வடக்குபுறம் சாக்கடை கால்வாய் நிறைந்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.‌அதனால் அந்த நேரத்தில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து‌ வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

பலத்த மழையால் உடுமலையில் பொள்ளாச்சி சாலை, பழனி சாலை, குட்டைத் திடல் உள்ளிட்ட சிலபகுதிகளில் பள்ளமான இடங்களில் மழைத்தண்ணீர் தேங்கி நின்றது. மழை பெய்யும்போது பலத்த காற்று வீசியதால் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே பை- பாஸ் சாலை, பொள்ளாச்சி சாலை- தளி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பிளக்ஸ் பேனர்கள் சாய்ந்தன.

மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமரலிங்கம், கொழுமம்,கணியூர், காரத்தொழுவு, துங்காவி, வேடபட்டி, கழுகரை, ஜோத்தம்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, கண்ணாடி புதூர், கிருஷ்ணாபுரம், மைவாடி, போன்ற பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.. சுமார் ஒரு மணிநேரத்திற்க்கும் மேலாக பெய்த கனமழையால் இங்குள்ள குளம், ஏரிகள், கால்வாய்கள் போன்ற நீர் நிலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் எங்கும் மழைநீர் தேங்கியுள்ளது.

மடத்துக்குளம் பகுதியில் பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story