கோவை தனியார் மருத்துவமனையில் வாட்ஸ்-அப் மூலம் பயிற்சி டாக்டர்கள் பிரசவம் பார்த்ததாக புகார் உறவினர்கள் சாலை மறியல்


கோவை தனியார் மருத்துவமனையில்  வாட்ஸ்-அப் மூலம் பயிற்சி டாக்டர்கள் பிரசவம் பார்த்ததாக புகார் உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Jun 2019 11:00 PM GMT (Updated: 5 Jun 2019 7:42 PM GMT)

கோவை தனியார் மருத்துவமனையில், வாட்ஸ்-அப் மூலம் பயிற்சி டாக்டர்கள் பிரசவம் பார்த்ததாக கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர்,

கோவை ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி நித்யா (வயது 30). நிறைமாத கர்ப்பிணியான இவர் புலியகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனைக்கு சென்று வந்தார்.

அந்த மருத்துவமனை நிர்வாகத்தினரின் அறிவுரையின் பேரில் நித்யாஅங்கு தங்கி சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் பிரசவத்தின்போது அவருக்கு பனிக்குடம் உடைந்தது. இதைதொடர்ந்து அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த குழந்தையின் இதயத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் நித்யாவுக்கு, வாட்ஸ்-அப் மூலம் கருத்து கேட்டு பிரசவம் பார்த்ததாக கூறி அவருடைய உறவினர்கள் நேற்று தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் புலியகுளம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நித்யாவின் உறவினர்கள் கூறியதாவது:-

நிறைமாத கர்ப்பிணியான நித்யாவுக்கு பிரசவம் பார்த்தபோது மருத்துவமனையில் தலைமை டாக்டர் இல்லை. பயிற்சி டாக்டர்கள் தான் பிரசவம் தொடர்பான சிகிச்சை விவரங்கள் மற்றும் படங்களை செல்போனில் போட்டோ எடு்த்து வாட்ஸ்- அப்பில் தலைமை டாக்டருக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்டு பிரசவம் பார்த்தனர். இதனால்தான் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்த தகவலின்பேரில் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

அப்போது தவறு நடந்து இருந்தால், மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.அதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story