சோழசிராமணி அருகே, முன்விரோதத்தில் விவசாயியை வழிமறித்து கத்திக்குத்து
சோழசிராமணி அருகே முன்விரோதத்தில் விவசாயியை வழிமறித்து கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணியை சேர்ந்தவர் சண்முகம் என்ற சின்னத்தம்பி (வயது 54), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டு மீண்டும் தனது மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சோழசிராமணி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் சின்னத்தம்பியை வழிமறித்து உருட்டுக்கட்டை, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
மேலும் அவரது மார்பு, முதுகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்தியால் குத்தியுள்ளனர். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சின்னத்தம்பியை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொதுமக்கள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட இருவரை பிடித்து ஜேடர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மொளசி தேவம்பாளையத்தை சேர்ந்த காட்டுப்பூச்சி என்ற பரணீதரன் (20) என்பவருக்கும், சின்னத்தம்பிக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் பிரச்சினையினால் ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்து நடந்திருப்பதும், இதனால் முன்விரோதம் காரணமாக பரணீதரன் தலைமையில் மேலும் 5 பேர் கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து பிடிபட்ட மொளசி தேவம்பாளையத்தை சேர்ந்த மோகன் மகன் கோபாலகிருஷ்ணன் (24), அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் தனசேகரன் (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பரணீதரன், லோகேஷ், துரையன், நவீன் ஆகிய 4 பேரை ஜேடர்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story