ரம்ஜான் பண்டிகை: நீலகிரி மாவட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
ரம்ஜான் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். நடுவட்டம் பள்ளிவாசலில் அபிபுல்லா தலைமையிலும், நடுகூடலூர் பள்ளிவாசலில் இமாம் கமரூதீன் அசரத் பார்கவி தலைமையிலும், கூடலூர் பெரிய பள்ளிவாசலில் முஜீப் தலைமையிலும், சின்ன பள்ளிவாசலில் இமாம் அப்துல் காதர் தலைமையிலும், சுங்கம் ரவுண்டானா பள்ளிவாசலில் செய்தலவி தலைமையிலும், மசினகுடி பள்ளிவாசலில் தங்கல் தலைமையிலும் சிறப்பு தொழுகைகள் நடந்தன.
இதேபோன்று கூடலூர் 1-வது மைல் பள்ளிவாசல்களில் அப்துல் கரீம் தலைமையிலும், எல்லமலை பள்ளிவாசலில் ரகுமான் தலைமையிலும், தேவர்சோலை பள்ளிவாசலில் ஷெரீப் தலைமையிலும், ஒற்றவயலில் உம்மர் தலைமையிலும், நாடுகாணி பள்ளிவாசலில் இமாம் அசைனார் தலைமையிலும், பாடந்தொரையில் உஸ்மான் தலைமையிலும், கூடலூர் முஸ்லிம் அனாதை இல்ல பள்ளிவாசலில் முகமது அலி தலைமையிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
பந்தலூர் தாலுகாவில் உள்ள நெலாக்கோட்டை பள்ளிவாசலில் சித்திக் தலைமையிலும், பாட்டவயலில் அபுபக்கர் தலைமையிலும், எருமாடு பள்ளிவாசலில் ராஷீது தலைமையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து ஏழைகளுக்கு அரிசி, பணம் தானமாக வழங்கினர். மேலும் தொழுகை முடிந்த பின்னர் முஸ்லிம்கள் தங்களது மூதாதையர்களின் நினைவிடங்களுக்கு ஊர்வலமாக சென்று பிரார்த்தனை செய்தனர்.
ஊட்டி லோயர் பஜார் பெரிய பள்ளிவாசலில் காலை 10.30 மணிக்கும், மெயின் பஜார் சின்ன பள்ளிவாசலில் காலை 9.30 மணிக்கும் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் காந்தல், நொண்டிமேடு, பிங்கர்போஸ்ட், மேட்டுச்சேரி, தலைகுந்தா உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
கோத்தகிரி கடைவீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் பேஷ் இமாம் சதாம் உசைன் தலைமையிலும், ராம்சந்த் பகுதியில் உள்ள நூர் உல் மதரஸா பள்ளிவாசலில் சிகாபுதீன் தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மேலும் அரவேனு, கட்டபெட்டு, கைகாட்டி பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை நாளில் அசைவ பிரியாணி, நெய் சோறு உள்பட அறுசுவை உணவுகளை சமைப்பதில் முஸ்லிம்கள் கவனம் செலுத்துவது வழக்கம். பின்னர் விருந்தினர்கள், நண்பர்களுக்கு வழங்கி தானும் உண்டு மகிழ்வார்கள். ஆனால் கூடலூர் பகுதியில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் முஸ்லிம்கள் அறுசுவை உணவுகளை குறித்த நேரத்தில் சமைக்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். இதுகுறித்து கூடலூர் பகுதி முஸ்லிம்கள் கூறியதாவது:-
இந்த காலக்கட்டத்தில் அம்மிக்கல் பெரும்பாலான வீடுகளில் கிடையாது. மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களில் மசாலா பொருட்கள் அரைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை நாளில் அசைவ உணவுகள் சமைப்பதற்காக தயாராக இருந்த நிலையில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கூடலூரில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மிக்சி, கிரைண்டர்களை பயன்படுத்தி மசாலா பொருட்களை அரைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
3 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் குறிப்பிட்ட நேரத்தில் உணவு சமைக்க முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் மிகவும் காலதாமதமாக உணவு சமைத்து பரிமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story