குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்


குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Jun 2019 3:45 AM IST (Updated: 6 Jun 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பழனி,

பழனியை அடுத்த ஆயக்குடி அருகேயுள்ள சட்டபாறை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). அவருடைய மனைவி செல்வி (35). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வி மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் வீட்டில் தூங்க சென்றனர். இருப்பினும் மனமுடைந்து காணப்பட்ட செல்வி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து அதிகாலை நேரத்தில் அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். 120 அடி உயரம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் படுகாயம் அடைந்த செல்வி உயிருக்கு போராடிய நிலையில் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த முருகன் எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் அலறல் சத்தம் கேட்ட கிணற்று பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது கிணற்றில் படுகாயங்களுடன் செல்வி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து முருகன் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து, அவரும் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதில் முருகனும் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே செல்வி பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து தோட்டக்காரர்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் தனது மனைவியின் உடலுடன் முருகன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக ஆயக்குடி போலீஸ் நிலையம் மற்றும் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story