குமரி மாவட்டத்தை கலக்கிய பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது 57¾ பவுன் நகைகள் மீட்பு


குமரி மாவட்டத்தை கலக்கிய பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது 57¾ பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 5 Jun 2019 11:15 PM GMT (Updated: 5 Jun 2019 9:06 PM GMT)

குமரி மாவட்டத்தை கலக்கிய பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 57¾ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சுசீந்திரம், அஞ்சுகிராமம், மணவாளக்குறிச்சி, இரணியல் ஆகிய போலீஸ் சரகங்களிலும், நெல்லை மாவட்டம் கூடங்குளம், பழவூர் ஆகிய பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து முகவரி கேட்பது போல் மர்மநபர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்த புகார்கள் குறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் சோதனைச்சாவடியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அந்த வாலிபர் முன்னுக்குபின் முரணாக பேசியதை தொடர்ந்து போலீசார் அவரை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குமரி, நெல்லை மாவட்டத்தை கலக்கிய பிரபல கொள்ளையன் என்ற தகவல்கள் வெளியாயின. மேலும் அதுபற்றிய விவரம் வருமாறு:-

பிடிபட்ட வாலிபர், தக்கலை குமாரபுரம் அருகே முட்டைக்காடு புதுக்காலனியை சேர்ந்த ஷிபு (வயது 29) என்பது தெரியவந்தது. மேலும் அவர், கடந்த 4 மாதங்களாக கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையாள்விளை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்ததும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து நகைகளை பறித்து சென்றதும் தெரிந்தது.

நெல்லை மாவட்டத்தில் 4 இடங்களிலும், குமரி மாவட்டத்தில் 12 இடங்கள் என 16 இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். மேலும், கன்னியாகுமரி அருகே கொட்டாரம் லட்சுமிபுரம் பொட்டல்குளம் விலக்கில் நேற்று முன்தினம் அந்த வழியாக வந்த வழுக்கம்பாறையை சேர்ந்த வேலு என்பவரிடம் நகை பறிக்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

ஷிபு கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் 57¾ பவுன் நகைகளை மீட்டனர். மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் ஷிபுவை கைது செய்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story