பூந்தமல்லி அருகே கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்த வடமாநில வாலிபரால் பரபரப்பு
பூந்தமல்லி அருகே கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்த வட மாநில வாலிபரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று மாலை இந்த கோவிலை சுற்றிலும் சீரமைப்பதற்காக கதவுகளை திறந்து வைத்திருந்தனர். அப்போது கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது, கோவில் வளாகத்தில் உள்ள அறை ஒன்றின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது 28 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் சட்டை ஏதும் அணியாமல் பீரோவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். இதனை கண்டதும் கதவை வெளிப்புறமாக பூட்டிய கோவில் நிர்வாகிகள் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
இதன் பிறகு கோவிலுக்குள் நிர்வாகிகள் சென்று பார்த்தபோது, அங்கு சாமிசிலைகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வடமாநில வாலிபர் அந்த 2 சாமி சிலைகளையும் உடைத்து இருப்பது தெரியவந்தது.
மேலும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, கல்லுடன் கோவிலுக்குள் வந்த வாலிபர் கோவிலுக்குள் இருந்த ராகு மற்றும் நந்தி சிலையை கடப்பாறையால் உடைத்துள்ளார். அதில் ராகு சிலை இரண்டு துண்டாக உடைந்து விட்டது. முன் பகுதியில் இருந்த நந்தி சிலையை கடப்பாறையால் உடைத்து சேதப்படுத்தி இருப்பது தெரியவந்தது.
மனநலம் பாதிக்கப்பட்டவரா?
இந்த நபர் கோவிலுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்தாரா? அல்லது சிலைகளை சேதப்படுத்தும் நோக்கில் வந்தாரா? என்ற கோணத்தில் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில வாலிபர் கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story