பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளை தொடர்ந்து சிக்கராயபுரம் கல்குவாரியும் வறண்டு விடும் நிலை புதிய குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணிகள் தீவிரம்


பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளை தொடர்ந்து சிக்கராயபுரம் கல்குவாரியும் வறண்டு விடும் நிலை புதிய குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 5 Jun 2019 9:43 PM GMT (Updated: 5 Jun 2019 9:43 PM GMT)

பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டதை தொடர்ந்து சிக்கராயபுரம் கல்குவாரியும் வறண்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடாக எருமையூரில் உள்ள கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றது. ஏரிகளின் கடைசி சொட்டு நீரும் உறிஞ்சப்பட்டு வறண்டு போய் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டன.

சென்னை, மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் 25 கல்குவாரிகள் உள்ளன. செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அந்தப்பகுதியில் பெய்த மழைநீர் கால்வாய்கள் மூலம் இந்த கல்குவாரிகளில் தேங்கி உள்ளது.

சாதகமான முடிவு

கடந்த 2017-ம் ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தேவைக்காக சிக்கராயபுரத்தில் உள்ள 5 கல்குவாரிகளில் இருந்து தினசரி 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டது.

இதற்காக முறையாக கல்குவாரியில் இருந்து மாதிரி தண்ணீர் எடுத்து விஷத்தன்மை இருக்கிறதா? குடிநீருக்கு பயன்படுத்த உகந்ததா? என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. சாதகமான முடிவு வந்ததால் தொடர்ந்து கல்குவாரி தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்க மிதவை எந்திரம்

குறிப்பாக சிக்கராயபுரத்தில் உள்ள 8 மற்றும் 19 எண் கொண்ட கல்குவாரிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தண்ணீர் இருந்தது. அதாவது 200 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. இதில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் வீதம் தண்ணீர் எடுக்கப்பட்டது. இதற்காக அமெரிக்காவில் இருந்து 10 டன் எடை கொண்ட நவீன ராட்சத மிதவை எந்திரம் கொண்டுவரப்பட்டது.

இந்த ராட்சத எந்திரம் கல்குவாரியில் மிதக்க விடப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் 4½ கி.மீ. தூரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்டது.

எருமையூர் கல்குவாரி

தற்போது கல்குவாரியில் தண்ணீர் குறைந்ததால் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே அதில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும். இதற்காக 19-வது கல்குவாரிக்கு, 8-வது கல்குவாரியில் உள்ள தண்ணீர் 5 ராட்சத துளைகள் இட்டு கொண்டுவரப்படுகிறது. தொடர்ந்து மேலும் 3 ராட்சத துளைகள் அமைக்க திட்டமிட்டு உள்ளனர்.

அத்துடன் ஏற்கனவே மிதந்து கொண்டு இருக்கும் எந்திரத்தை எடுத்துவிட்டு, வேறு ஒரு எந்திரத்தை ஓரிரு நாட்களில் மிதக்கவிடவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 10 நாட்களுக்கு பிறகு நிலைமையை சமாளிக்க, புதிதாக 7 கி.மீ. தூரத்தில் உள்ள எருமையூர் ஊராட்சியில் உள்ள 2 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

60 சதவீத பணிகள் நிறைவு

சிக்கராயபுரத்தில் இருந்து 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களாக இங்கிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதால் தற்போது தண்ணீர் குறைந்து வறண்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் மாற்று ஏற்பாடாக எருமையூரில் உள்ள கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ராட்சத இரும்பு குழாய் பதிக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

எருமையூர் கல்குவாரியில் மிதவை எந்திரத்தை பயன்படுத்தலாமா? அல்லது கரைகளில் மின்மோட்டார்களை வைத்து தண்ணீர் எடுக்கலாமா? என்று ஆய்வு செய்து வருகிறோம். எருமையூர் கல்குவாரியில் எப்படியும் 1 டி.எம்.சி. தண்ணீர் இருக்கும் என்று தெரிகிறது. எப்படியும் ஒரு மாதத்திற்கு இந்த தண்ணீரை பயன்படுத்த முடியும். எனவே அடுத்த 2 வாரத்தில் எருமையூரில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story