திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்டு மாத இறுதிக்குள் 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்டு மாத இறுதிக்குள் 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2019 3:32 AM IST (Updated: 6 Jun 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்டு மாத இறுதிக்குள் 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பசுமை பரப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ந்தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காற்று மாசினை தவிர்ப்போம் என்ற மையக்கருத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

காற்று மாசினை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மரக்கன்றுகள் நடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், பசுமை பரப்பை அதிகரித்திடவும் பல நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 15 தொழில்நிறுவனங்கள் நேற்று ஒரே நாளில் 1,500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கான ஏற்பாடுகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது.

4 லட்சம் மரக்கன்றுகள்

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மேலும் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் 4 லட்சம் மரக்கன்றுகள் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி டிசம்பர் மாத இறுதிக்குள் பொதுப்பணித்துறையால் அனைத்து ஏரிக்கரையின் மேல் படிப்படியாக ஒரு லட்சம் பனை மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கஜலட்சுமி மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story