திருநின்றவூர் பேரூராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு
திருநின்றவூர் பேரூராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆவடி,
திருநின்றவூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட கோமதிபுரம், பெரிய காலனி, ராமதாசபுரம், கன்னிகாபுரம், சுதேசி நகர், முத்தமிழ் நகர், திருவேங்கட நகர், பெரியார் நகர், அந்தோனிநகர், லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம், முருகேசன் நகர், இந்திராநகர், பாலகிருஷ்ணா நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் 18-வது வார்டில் அடங்கும்.
இதில் தாசர்புரம், அந்தோணி நகர், கே.ஜி. நகர், செல்வராஜ் நகர், ஐ.ஓ.வி. நகர், தாமோதரன் நகர், கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மகளிர் குழுவினரால் சாலைகளில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக உள்ளன. ஆனால் குப்பைகளை அகற்றும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பல இடங்களில் சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. ஊழியர்கள் சரிவர குப்பைகளை அகற்றப்படாததால் சாலையில் சிதறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
குப்பைத்தொட்டிகள் இல்லை
பேரூராட்சி நிர்வாகம் சரிவர செயல்படவில்லை. ஊழியர்கள் சரிவர வேலை செய்யவில்லை. இதனால் சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக கன்னிகாபுரம், ராமதாசபுரம், சுதேசி நகர், திருவேங்கட நகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குறிப்பாக 54ஏ பஸ் நிலையம், திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே ரெயில் நிலைய சாலை ஆகிய பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு சிதறிக் கிடக்கின்றன.
குப்பைத்தொட்டிகள் இல்லாததால் சாலையோரங்களில் கொட்டப்படும் இந்த குப்பைகள் சாலைகளில் சிதறி மாடுகள், பன்றிகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் செல்லும் பொதுமக்கள் மீது விழுந்து ஒட்டிக்கொள்கின்றன.
நோய் பரவும் அபாயம்
இப்பகுதியில் குப்பைகளை அள்ளும் பணியை பேரூராட்சி நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைத்து உள்ளது. ஆனால் அவர்கள் சரிவர குப்பைகளை அள்ளுவது இல்லை. நாள் கணக்கில் இந்த குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகின்றன. இதில் உருவாகும் கொசுக்கள் அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு வரக்கூடிய பொதுமக்களை கடிப்பதால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநின்றவூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை சரிவர அகற்றி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story