ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 25 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பராமரிப்பின்றி செயல்படாமல் பூட்டி கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
ஆவடி,
ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கடந்த 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு சுமார் 125 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது இந்த குடியிருப்பில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதி அமைக்கும்போது மக்களின் வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாயக்கூடம், வணிக வளாகம், குடிநீர் மேல்நிலைத்தொட்டி, நூலக கட்டிடம் உள்ளிட்டவை கட்டப்பட்டன.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி கிடக்கிறது. மேலும் கட்டிடங்கள் விரிசல் அடைந்து முற்றிலும் சேதமடைந்து முட்புதர்களும், மரம், செடிகளும் முளைத்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இந்த பாழடைந்த கட்டிடத்தில் குடிமகன்கள் பகல், இரவு நேரங்களில் மது அருந்துவதும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர். மேலும் பாழடைந்த இந்த கட்டிடங்களில் இருந்து பாம்பு, தேள், பூரான் உள்ளிட்டவை பெருகி குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
அடிப்படை வசதிகள் இல்லை
மேலும் இந்த குடியிருப்பு கட்டப்படும் போது அங்கு சுமார் 32 ஏக்கர் நிலம் பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டது. மேலும், அந்த ஒதுக்கப்பட்ட இடத்தில் தபால் நிலையம், பஸ் நிலையம், நூலகம், வங்கி, வணிக வளாகம் ஆகியவை சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்படாமல் அப்படியே பாழடைந்து காணப்படுகிறது.
பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி தற்போது எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இங்கு கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பாழடைந்து கிடப்பதால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். சமுதாயக்கூடம் முடங்கி கிடப்பதால் ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் தங்களுடைய சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமலும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனியார் மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு
அதேபோல் பஸ் நிலையம் இல்லாததால் சுமார் 2 கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் தூரம் பஸ் நிலையத்திற்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் தொட்டி இருந்தும் அது பயன்பாட்டில் இல்லாததால் அப்பகுதி மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பணம் கொடுத்து லாரிகளில், டிராக்டர்களில் குடிநீர் வாங்குகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பல இடங்களில் பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.
நடவடிக்கை வேண்டும்
பாதாள சாக்கடை இல்லாததால் பல இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து துறை சம்பந்தப்பட்ட கட்டிடங்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, சமூக விரோதிகளின் பிடியில் இருந்து கட்டிடங்களை மீட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story