புதுவையில் அதிரடி நடவடிக்கை: வேக கட்டுப்பாட்டை மீறிய வாகனங்களுக்கு ரூ.400 அபராதம் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்


புதுவையில் அதிரடி நடவடிக்கை: வேக கட்டுப்பாட்டை மீறிய வாகனங்களுக்கு ரூ.400 அபராதம் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 6 Jun 2019 4:30 AM IST (Updated: 6 Jun 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் வேக கட்டுப்பாட்டை மீறிய வாகனங்களுக்கு ரூ.400 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின்படி எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து போலீசார் அறிவித்துள்ளனர்.

அதன்படி முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், கல்வி நிறுவனங்கள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் குறித்து போலீசார் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். வேக கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து இருந்தனர்.

இதற்காக புதுவையில் உள்ள 4 போக்குவரத்து காவல்நிலையங்களுக்கு தலா ஒன்று வீதம் மொத்தம் 4 ஸ்பீடு லேசர் கன் வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவியை பயன்படுத்துவது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், 13 சப்–இன்ஸ்பெக்டர்கள், 20 காவலர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதிக வேகம், விதிகள் மீறல் போன்ற காரணங்களுக்காக வாகனங்களை நிறுத்தி பல்வேறு குழுக்களாக பிரிந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். முதல் தடவை என்பதால் பலரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். வாகனங்கள் வேகமாக செல்வதை ஆய்வு செய்வதற்கான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட வாகனம் முக்கிய சந்திப்புகளில் பயன்படுத்தப்பட்டது.

இந்த வாகனங்களில் நவீன கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அதிக வேகம், செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டியது, சாலையில் எல்லைக் கோடுகளை மீறுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது 200 மீட்டர் தொலைவில் வரும்போதே வாகனத்தின் வேகத்தை காட்டிக் கொடுப்பதுடன் 100 மீட்டர் அளவில் வரும்போது சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண், வேகம் போன்ற விவரங்களை ‘பிரிண்ட் அவுட்’ மூலம் ஆவணமாகவே எடுத்து கொடுத்தது.

புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் நேற்று காலை கடற்கரை சாலையில் தலைமை செயலகம் அருகே நின்று கொண்டு ஸ்பீடு லேசர் கன் மூலம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனங்களை பிடித்து தலா ரூ.400 அபராதம் விதித்தனர். நேற்று மட்டும் புதுவையில் 17 வண்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 25 வாகனங்களும் சிக்கின. இதற்காகவும் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதேபோல் கொருக்கமேடு பகுதியில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் அதிநவீன கருவி பொருத்தப்பட்ட வாகனம் மூலம் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த 10 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

இந்த நடவடிக்கையில் சிக்கிய பலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேக கட்டுப்பாடு குறித்து தெரியாத நிலையில் போலீசார் திடீரென அபராதம் வசூலித்ததற்கு அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பிட்ட சாலைகளில் நிர்ணயித்த வேகத்தில் தான் வாகனங்களில் செல்ல வேண்டும் என்று தெரிவித்து போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் இதுபற்றி பொதுமக்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கவில்லை. இதற்காக ரூ.400 அபராதம் என்று கூறி வாகன ஓட்டிகள் வாய் தகராறு செய்தனர். இதனால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அபராதம் செலுத்த பணம் இல்லாமல் பலர் கைபிசைந்து நின்றனர். எனவே தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து அபராதம் செலுத்தி விட்டுச் சென்றனர்.

இதுபற்றி போக்குவரத்து போலீசார் கூறும் போது, ‘வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு குறித்து கடற்கரையில் 3 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக வைக்கப்படுவதுடன் மற்ற இடங்களிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு நிர்ணயித்து போலீசார் நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:–

விஜயலட்சுமி (குடும்பதலைவி):–

சாலையில் வாகனங்களில் செல்ல வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடத்தில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயனுள்ளது. பொதுவாக அரசு ஒரு விதிமுறையை கொண்டு வரும் போது மக்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும். எனவே இது மிகவும் வரவேற்கத்தக்கது.

கல்லூரி மாணவிகள் கீர்த்தனா, மகேஸ்வரி:–

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சிலர் போட்டிக் போட்டு கொண்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. சாலைகளில் நடந்து செல்லவும், சாலையை கடக்கவும் பயமாக உள்ளது. வேகத்தை குறைக்க கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டம் தேவை. இதை புதுவை முழுவதும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

இந்த திட்டத்தின் மூலம் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும். ஆனால் பொதுமக்களிடம் இதுபற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை. அரசு இது தொடர்பாக போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரூ.400 அபராதம் என்பது மிகவும் அதிகமாக உள்ளது. அபராத தொகையை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும்.

அரசு ஊழியர் வேலவன்:–

விபத்துகளை தடுக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவசர கோலத்தில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்பின் அபராதம் விதிக்கலாம்.

நெல்லித்தோப்பு சார்லஸ்:

அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வந்து முதல் முறை பிடிபட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது. ஒன்று அல்லது 2 முறை எச்சரிக்கை செய்து அனுப்ப வேண்டும். அதன் பிறகே அபராதம் விதிக்க வேண்டும். அபராதம் ரூ.400 என்பது அதிகமாக உள்ளது. எனவே இந்த தொகையை குறைக்க வேண்டும்.

நெல்லித்தோப்பு திலிப் சர்மா:–

இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டம். ஆனால் இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்தந்த சாலையில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். தற்போது ஒரு சில இடத்தில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.


Next Story