அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் அனல் பறக்கிறது நெல்லையில் 103 டிகிரி கொளுத்திய வெயில்
நெல்லையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயில் கொளுத்துகிறது. நேற்று 103 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
நெல்லை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போய் விட்டதாலும், கோடை வெயிலின் தாக்கத்தாலும் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. நெல்லையில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவானது.
இந்த நிலையில் கடந்த மாதம் அக்னி நட்சத்திர காலம் முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நாளில் மேக கூட்டங்கள் ஒன்றுசேர்ந்து ஆங்காங்கே மழை பெய்து, இதமான காற்றும் வீசியது. இதனால் அக்னி நட்சத்திரம் முடிவடைந்து விட்டது, தென்மேற்கு பருவ காற்றும், மழையும் பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் நெல்லையில் தற்போதும் அனல் காற்று பறக்கிறது. நேற்று நெல்லையில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் பகல் நேரத்தில் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர் சாலைகளில் நடந்து சென்றவர்களும், வாகனங்களில் சென்றவர்களும், துணியால் முகத்தை மூடியவாறு சென்றனர். ஒருசிலர் வெளியே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். பெரும்பாலானோர் மதிய நேர பயணத்தை தவிர்த்தனர். இதையொட்டி குளிர்பான கடைகள், இளநீர் கடைகளை மக்கள் தேடிச்சென்று தாகம் தணித்தனர்.
Related Tags :
Next Story