ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் இளைஞர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கடலூரில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஆகவே இடைத்தரகர்களை இளைஞர்கள் யாரும் அணுக வேண்டாம் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்,
இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் வேலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், காஞ்சீபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முகாமில் கலந்து கொள்ள வரும் இளைஞர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக இளைஞர்கள் அமரும் வகையில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளது.
முன்னதாக எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எங்கு அமர வேண்டும் என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த முன்னேற்பாடுகளை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் அன்புசெல்வன், இந்த முகாமில் மருத்துவ பரிசோதனை, உடற்தகுதி, எழுத்துத்தேர்வு அனைத்தும் கணினிமயமாகவும், வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடன் நடைபெறும். ஆகவே இந்த தேர்வுக்காக வரும் இளைஞர்கள் யாரும் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story