வாலாஜா ஒன்றியத்தில் மழைக்குறைவை தடுக்க 27 ஏக்கரில் 2,800 மரக்கன்றுகள்
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மழைக்குறைவை தடுக்கவும் வாலாஜா ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளில் வேலைஉறுதியளிப்பு திட்டத்தில் 27 ஏக்கரில் 2,800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
வேலூர்,
மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இந்த திட்டத்தில் நீர்நிலைகளான ஏரி, குளங்களை ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தில் கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் ஏரிகளை ஆழப்படுத்துதலே இந்த திட்டத்தில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் வாலாஜா ஒன்றியத்தில் உள்ள மருதம்பாக்கம், கல்மேல்குப்பம், கத்தாரிகுப்பம் ஆகிய ஊராட்சி்களில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஒரு வித்தியாசமான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஏரிகளில் இருந்த கருவேல மரங்களை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அனைத்து ஏரிகளிலும் கருவேலமரங்கள் அகற்றப்பட்டது. ஆனால் வாலாஜா ஒன்றியத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகளை நடத்தொடங்கி உள்ளனர்.
இதற்காக 2 ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மருதம்பாக்கம் ஏரியில் மட்டும் 7 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அதேபோன்று கல்மேல்பாக்கம், கத்தாரிகுப்பம் ஆகிய பஞ்சாயத்துகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தேர்வு ெசய்து மொத்தம் 27 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
புளியங்கன்று, புங்கன் உள்பட பல்வேறு வகையான 2,800 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதற்காக அகழிகள் அமைத்துள்ளனர். அதில் தற்போது பெய்துள்ள மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஒருவருடமாகிறது. இதனால் மரக்கன்றுகள் நடப்பட்டு மருதம்பாக்கம் ஊராட்சியில் நடப்பட்ட மரக்கன்றுகள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. இந்த செடிகள் வளர்ந்து மரங்களானால் இயற்கையான காற்று கிடைப்பதுடன், மழை வருவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காடுகள் மற்றும் மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் மழையின் அளவும் குறைந்து வருகிறது. இதனால் வறட்சி ஏற்பட்டு ஏரி, குளங்கள் வறண்டு விடுகின்றன. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நல்ல மழை பெய்யவும், வறட்சியில் இருந்து விடுபடவும் இதுபோன்று மரக்கன்றுகள் நடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story