பக்தர்கள் செல்ல தடை: வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் கேட் மூடப்பட்டது
வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் மலையடிவாரத்தில் உள்ள கேட் மூடப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி என்ற இடத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவில் தென்கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவில் அருகே உள்ள மலை மீது சென்றால் 7-வது மலையில் லிங்கம் உள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அந்த லிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம்.
பக்தர்கள் செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், அடிக்கடி காலநிலை மாறுவதாலும் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி கொடுக்கப்படுகிறது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலை மீது பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்து இருந்தது. ஜூன் மாதம் தொடங்கியதும், அங்கு காலநிலை மாற்றம் ஏற்படும் என்பதால் கடந்த 1-ந் தேதியில் இருந்து மலை மீது செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து மலை மீது பக்தர்கள் செல்வதை தடுக்க வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அருகே மலையடிவாரத்தில் உள்ள கேட்டை வனத்துறையினர் மூடினார்கள். அத்துடன் யாரும் மலை மீது செல்லக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஓரிரு நாட்களில் கேரளாவில் பருவமழை தொடங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை பெய்தால் வெள்ளியங்கிரி மலை மீது செல்ல முடியாது. திடீரென்று ஆட்களை தூக்கிச்செல்லும் அளவுக்கு சூறாவளி காற்று வீசும். இந்த காற்று எப்போது வரும் என்று தெரியாது. அத்துடன் கடும் குளிரும் இருக்கும்.
அதுபோன்று திடீரென்று மேக மூட்டம் சூழ்ந்து விடும். இதனால் 10 அடி தூரத்தில் கூட இருப்பதை நாம் கண்டுபிடிக்க முடியாது. அதற்கான விசேஷமான ஆடைகள், டார்ச் லைட்டுகளுடன் மட்டுமே மலை மீது செல்ல முடியும்.
எனவேதான் ஜூன் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே தடை காலத்தில் மலை மீது பக்தர்கள் யாரும் செல்ல முயற்சிக்க வேண்டாம். பக்தர்கள் செல்வதை கண்காணிக்க சிறப்பு குழுவும் நியமிக்கப்பட்டு இருக்கிறது. அதையும் மீறி பக்தர்கள் யாராவது சென்றால் அவர்கள் மீது வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story