கோவை அருகே ஒரே டம்ளரில் 5 வித சுவையுடன் காபி போடும் டீக்கடைக்காரர்


கோவை அருகே ஒரே டம்ளரில் 5 வித சுவையுடன் காபி போடும் டீக்கடைக்காரர்
x
தினத்தந்தி 7 Jun 2019 3:45 AM IST (Updated: 7 Jun 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே ஒரே டம்ளரில் 5 வித சுவையுடன் காபி போட்டு டீக்கடைக்காரர் அசத்தி வருகிறார்.

இடிகரை, 

கோவை துடியலூரை அடுத்த கணுவாயை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 56). இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மாணிக்கம் அங்குள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதையடுத்து இருசக்கர வாகனங்களில் சென்று டீ விற்பனை செய்து வந்தார்.

இவர் வீட்டில் விதவிதமாக டீ போட முயற்சி செய்தார். அதன்படி, ஒரே டம்ளரில் 5 வித சுவையுடன் காபி போடும் முயற்சியில் வெற்றி பெற்றார். அதன்படி, முதலில் ஒரே டம்ளரில் பால் தனியாகவும், டிக்காசன் தனியாகவும் இருக்கும் வகையில் டீயை கண்டுபிடித்தார். இதையடுத்து அவர் ஒரே டம்ளரில் டீ, பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ், பிளாக் காபி ஆகிய 5 வித சுவையுடன் காபி போட்டு வருகிறார்.

இதை பலரும் விரும்பி குடித்தனர். இதையடுத்து அவர் துடியலூர் அருகே கணுவாயில் சொந்தமாக டீக்கடை தொடங்கினார். அங்கு அவர் ஒரே டம்பளரில் 5 வித சுவையுடன் காபி போடுவதை பலரும் விரும்பி குடித்து செல்கின்றனர்.

இதுகுறித்து மாணிக்கம் கூறியதாவது:-

நான் 40 ஆண்டுகளாக டீக்கடையில் வேலை செய்து வந்தேன். இதனால் ஒரே மாதிரி காபி போடுவதற்கு பதிலாக ஏதாவது மாற்றி முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன். அதன்படி முயற்சி செய்து, ஒரே டம்பளரில் 5 வித சுவையுடன் காபி போடும் முயற்சி வெற்றி பெற்றேன். அதை பலரும் விரும்பி குடித்ததால் சொந்தமாக டீ கடை வைத்துள்ளேன்.

ஒன்றுடன் ஒன்று கலக்காமல் 5 வித சுவையுடன் காபி தயாரிக்கிறேன். அது டம்பளரில் 5 அடுக்குகளாக தனித்தனியாக தெரிவதால் பல இடங்களில் இருந்து தேடி வந்து காபி குடிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story