‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு டீன் வனிதா தகவல்
‘நிபா’ வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளதாக டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
மதுரை,
கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் அந்த காய்ச்சல் மீண்டும் அங்கு பரவி வருகிறது. கேரளாவில் இருந்து நிபா காய்ச்சல் தமிழகத்திற்கு பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
கேரளாவில் இருந்து வரும் பஸ், கார், வேன் உள்பட அனைத்து வாகனங்களில் வருபவர்களை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதையொட்டி தென்மாவட்டங்களின் தலைமை ஆஸ்பத்திரியாக திகழும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தனியாக வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்பத்திரி டீன் வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ்க்கு என 125-வது வார்டில் தனியாக தீவிர சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இதனை 33 படுக்கை வசதிகள் கொண்டதாக உருவாக்க உள்ளோம். முதல் கட்டமாக 7 படுக்கை வசதிகளை உருவாகியுள்ளோம். இந்த சிகிச்சை பிரிவில் டாக்டர்கள், நர்சுகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தயார் நிலையில் இருப்பார்கள்.
நிபா வைரஸ் காய்ச்சலை தடுக்கும் மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை இந்த காய்ச்சல் அறிகுறியில் யாரும் சிகிச்சைக்கு வரவில்லை. அவ்வாறு வரும் நோயாளிகளுக்கு நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story