வடமொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழுக்கு கொடுப்பதில்லை நல்லகண்ணு குற்றச்சாட்டு
வடமொழிக்கு கொடுக் கும் முக்கியத்துவத்தை தமிழுக்கு கொடுப்பதில்லை என நல்லகண்ணு குற்றம்சாட்டினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
மும்மொழி திட்டம் என மத்திய அரசு கொண்டு வருவது இந்தியை திணிக்கும் முயற்சிதான். இந்தியை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. வடமொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்திய அரசு தமிழுக்கு கொடுப்பதில்லை.
மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ-கார்பன் திட்டங்களால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் என்பதால் இந்த திட்டங்களை கைவிட வேண்டும்.
எப்போதும் இல்லாத வகையில் கடும் வறட்சி நிலவுகிறது. இயற்கை வளத்தை அ.தி.மு.க. ஆட்சி அழித்து வருகிறது. குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க திட்டம் வகுக்க வேண்டும். நீட் தேர்வை தமிழகம் எதிர்க்கும் நிலையில் இதில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. நீட் தேர்வை கைவிட வேண்டும். நாங்கள் மோடியை எதிர்க்கவில்லை. அவரது கொள்கைகளையே எதிர்க்கிறோம். அவர் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.
பா.ஜனதாவின் மதவெறியை எதிர்க்கிறோம். மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரக்கூடாது என கருதுகிறோம். இந்த அரசு எந்தவித திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசை எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள் அவர்களின் தயவில் வாழ்கிறார்கள்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் விடுதலை செய்யாமல் உள்ளது கவலை அளிக்கிறது. கவர்னர் உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story