சாமர்த்தியமாக ரெயில் விபத்தை தவிர்த்த என்ஜின் டிரைவருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
சாமர்த்தியமாக செயல்பட்ட ரெயில் என்ஜின் டிரைவருக்கு ரெயில்வே டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.
சென்னை,
சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி கடந்த 4-ந் தேதி காலை 6 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மின்சார ரெயில் சென்றது. இந்த ரெயிலை என்ஜின் டிரைவர் சுரேஷ்குமார் இயக்கினார்.
மின்சார ரெயில் வேளச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிது தூரத்தில், 3 தண்டவாள இரும்புத்துண்டுகள் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்ததை கண்ட சுரேஷ்குமார் ரெயிலை உடனே நிறுத்தினார். இது குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ரெயில்வே ஊழியர்கள் அந்த தண்டவாள துண்டுகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சென்னை கோட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பாறாங்கல்லை கண்ட என்ஜின் டிரைவர் காமராஜ் ரெயிலை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ரெயிலுக்கும், பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி சரியான நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்திய சுரேஷ்குமார் மற்றும் காமராஜூக்கு ரெயில்வே டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story