காலாப்பட்டு அருகே பெட்ரோல் ஊற்றி காருக்கு தீ வைப்பு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
காலாப்பட்டு அருகே கார், வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காலாப்பட்டு,
காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளத்தை சேர்ந்தவர் இதயதுல்லா. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, மகன் முகமது சபியுல்லா (வயது 24) ஆகியோர் கனகசெட்டிக் குளத்தில் வசித்து வருகின்றனர். முகமது சபியுல்லா மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட தனது குடும்பத்துடன் கூனிமேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு முகமது சபியுல்லா சென்றிருந்தார். அவர் தனது காரை கனகசெட்டிக்குளத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதன் அருகில் நிறுத்தியிருந்த மற்றொரு காருக்கும் தீ பரவியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காலாப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இதற்குள் முகமது சபியுல்லாவின் கார் பெரிய அளவில் எரிந்து நாசமானது. தகவல் அறிந்த அவர் உடனே வீட்டுக்கு வந்து பார்த்தார். கார் எரிந்த நிலையில், வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சோபா ஆகியவையும் தீயில் எரிந்து சேதமடைந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். முகமது சபியுல்லா வெளியூர் சென்றதை அறிந்த மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். மேலும் வீட்டுக்குள் பெட்ரோலை ஊற்றி தீயை கொளுத்தி போட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொழில் போட்டி அல்லது வேறு ஏதேனும் காரணமாக மர்மஆசாமிகள் முகமது சபியுல்லாவின் கார் மற்றும் வீட்டுக்கு தீ வைத்தார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story