அனுமதி பெறாமல் மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


அனுமதி பெறாமல் மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2019 4:45 AM IST (Updated: 7 Jun 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

அனுமதி பெறாமல் மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கஜா புயல் மறுசீரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். கலெக்டர் உமாமகேஸ்வரி, கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்துதல் கூடுதல் திட்ட அதிகாரி ராஜகோபால்சுங்கரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், கஜா புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நிபா வைரசால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் தலைமையில் களப்பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் நடமாடும் மருத்துவக்குழுக்களும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் அனுமதியோடு தமிழகத்தில் 152 இடங்களில் போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதை தவிர அனுமதியில்லாமல் மறுவாழ்வு சிகிச்சை மையம் நடத்துவது குற்றமாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு மனநல மருத்துவக்குழுவினர் மூலம் ஆய்வுகள் செய்யப்பட்டு 24 அங்கீகாரம் இல்லாத மையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது திருச்சியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அலுவலர்கள் மூலம் ஆய்வுகள் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் மூலம் சீல் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இது குறித்து போதிய விழிப்புணர்வு பெற்று அரசு மருத்துவமனையில் அமையப் பெற்றுள்ள மனநல காப்பகங்களிலோ அல்லது முறையான அனுமதி பெற்ற மையங்களிலோ சிகிச்சை பெற வேண்டும். மேலும், தமிழகத்தில் அனுமதி பெறாமல் மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story