குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி முகநூல் நண்பருக்கு வலைவீச்சு


குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி முகநூல் நண்பருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jun 2019 2:15 AM IST (Updated: 7 Jun 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.13.60 லட்சத்தை மோசடி செய்த முகநூல் நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் பகுதியை சேர்ந்தவர் 40 வயது நிரம்பிய தொழில் அதிபர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த தொழில் அதிபருக்கு முகநூல் பக்கத்தில் ஒருவர் நண்பர் ஆவதற்காக அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை தொழில் அதிபரும் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து தொழில் அதிபரும், முகநூலில் நண்பர் அழைப்பு விடுத்தவரும் முகநூல் மூலம் குறுந்தகவல் அனுப்பி பேசிக் கொண்டனர். மேலும் 2 பேரும் செல்போன் எண்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிலையில் தொழில் அதிபரிடம், அந்த நபர் என்னிடம் அதிக தங்கம் உள்ளது. அந்த தங்கத்தை நான் அதிக விலைக்கு விற்பனை செய்ய உள்ளேன். உங்களுக்கு வேண்டும் என்றால் குறைந்த விலைக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய தொழில் அதிபரும், அந்த நபரிடம் தங்கத்தை வாங்கி கொள்வதாக கூறி உள்ளார்.

ரூ.13.60 லட்சம் மோசடி

இதையடுத்து அந்த நபர் கூறிய வங்கிக்கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.13 லட்சத்து 60 ஆயிரத்தை தொழில் அதிபர் அனுப்பி உள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆனபோதிலும், அந்த நபர் தொழில் அதிபருக்கு தங்கம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி தொழில் அதிபர் கேட்டபோது அந்த நபர் சரியாக பதில் அளிக்காமல் மழுப்பி வந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழில் அதிபர், அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் தன்னை ஏமாற்றிய நபர் ரூ.13.60 லட்சத்தை மோசடி செய்தது தொழில் அதிபருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் மங்களூருவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story