சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்டனர்


சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:00 AM IST (Updated: 7 Jun 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஏ.செட்டிப்பள்ளி, பேடப்பள்ளி, பேரிகை உள்ளிட்ட வனப்பகுதிகளில் மான்கள் அதிக அளவில் உள்ளன. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மான்கள் அடிக்கடி தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் வருகின்றன.

அவ்வாறு வரும் மான்கள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. மேலும் தெருநாய்கள் கடித்தும் இறக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.

புள்ளிமான்

இந்தநிலையில் நேற்று காலையில் பேடப்பள்ளி வனப்பகுதியில் இருந்து 2 வயது மதிக்கத்தக்க மான் ஒன்று தண்ணீர் தேடி சின்னார் என்ற ஊருக்குள் புகுந்தது. இதைப் பார்த்த தெருநாய்கள் அந்த மானை கடிக்க துரத்தியது. இதனால் பயந்து போன புள்ளிமான் அருகில் உள்ள தனியார் நிறுவனத்திற்குள் புகுந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் புள்ளிமானை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து லேசான காயம் அடைந்த மானுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்்ந்து அந்த புள்ளிமானை வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.

Next Story