தமிழகத்தில் ஜூலை மாத இறுதிக்குள் 7 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கணினிமயமாக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


தமிழகத்தில் ஜூலை மாத இறுதிக்குள் 7 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கணினிமயமாக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2019 4:17 AM IST (Updated: 7 Jun 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஜூலை மாத இறுதிக்குள் 7 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கணினிமயமாக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திய விமான சேவை நிறுவனத்தின் மூலம் ரூ.28லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 4 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதாக வந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் கண்டிப்பாக பள்ளிக்கூடங்கள் மூட வாய்ப்பில்லை. 2 பேர் அல்லது 3 பேர் உள்ள பள்ளியை மூடுவதற்கு கேட்டுள்ளனர். அதனை தொடர்ந்து நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்கிறோம்.

தமிழகத்தில் இரு ஆசிரியர் உள்ள 2 ஆயிரத்து 142 பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை குறைந்த மாணவர்களே இருப்பதால் முதல்-அமைச்சர் தலைமையில் கல்வியாளர்கள், அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் 412 மையங்களில் 5 ஆயிரம் பேருக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. கேரளா போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ.2 லட்சம் வரை மாணவர்கள் செலவிட வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் மாணவர்கள் மத்திய அரசு தேர்வுகளை எளிதாக சந்திக்கும் வகையில் படிப்படியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திடங்களை மாற்ற 2 ஆண்டுகாலம் அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 8 மாதங்களில் பாடத்திட்டத்தை மாற்றியமைத்து சாதனை படைத்துள்ளோம். புதிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைத்து போட்டித்தேர்வுகளையும் எளிதாக எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி தொலைக்காட்சியை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது.

வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. நீட் தேர்வில் இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஜூலை மாதம் இறுதிக்குள் 7 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக நடந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சிவகாமி, முன்னாள் எம்.பி. காளியப்பன், முன்னாள் பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நம்பியூர் அருகே கெட்டிசெவியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகிறது. வருகிற சட்டமன்ற கூட்டத்ததொடரில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது. புத்தகங்கள் சீருடைகள் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன்.

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் புள்ளி விவரங்கள் இது வரை நான் வாங்கவில்லை. கிடைத்த பின்னர் எந்தனை அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று அறிவிக்கப்படும்.

வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவா்கள் 2013 மற்றும் 2014-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 82 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பணி வாய்ப்பு வழங்கும் நிலையில் அரசு இல்லை. மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தால் தான் பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.

இந்தாண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.. அது போல் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையை பொறுத்து மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளியலும் 7 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவியை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வு என்பது ஒரு தடவையில் முடிவதில்லை. தொடர்ந்து மாணவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நம்பியர் ஒன்றிய் கழகச் செயலாளர் தம்பி சுப்பிரமணியம், செல்வம், அரசு வக்கீல் கங்காதரன, கருப்பன் கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story