ஜவ்வாதுமலையில் ரூ.8¾ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி நல்லதம்பி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்


ஜவ்வாதுமலையில் ரூ.8¾ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி நல்லதம்பி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 8 Jun 2019 4:00 AM IST (Updated: 7 Jun 2019 10:12 PM IST)
t-max-icont-min-icon

ஜவ்வாதுமலையில் ரூ.8¾ கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி பார்வையிட்டார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை பகுதிகளில் புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. புதூர் நாடு ஊராட்சியில் புதூர் நாடு, மொழலை, சித்தூர், அருமல்பட்டு, வழுதலம்பட்டு, நடுகுப்பம், விளாங்குப்பம், கோம்பை, மேலூர், கீழூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 3,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அதே போல் நெல்லிவாசல் நாடு ஊராட்சியில் நெல்லிவாசல், செம்பரை, மேல்பட்டு, புலியூர், வலசை, மலைதிருப்பத்தூர், மலையாண்டிபட்டி கிராமங்கள் உள்ளன. இங்கு 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக நம்பி வாழ்கின்றனர். குறிப்பாக மலை வாழை, நெல், மா அதிக அளவில் பயிரிட்டு வருகிறார்கள். அவர்கள் விளைவிக்கும் விவசாய பயிர்களை சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் திருப்பத்தூர், செங்கம், சிங்காரப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதே போல் முக்கிய தேவைகளுக்கும் இதே பகுதிகளுக்கும் தான் செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் சென்று வருவதற்கு எந்தவித சாலை வசதியும் கிடையாது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு இருந்ததாகவும், அந்த பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதால் சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டதோடு சாலையை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் சாலைகள் இருந்த இடமே தெரியாமல் ஒத்தையடி பாதையாக கரடு, முரடான பாதையாக மாறிவிட்டது.

இதுகுறித்து திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.நல்லதம்பி சட்டமன்றத்தில் சாலை கேட்டு பேசினார். மேலும் மலைவாழ் மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சாலை அமைக்க அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்று, ரூ.8 கோடியே 79 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து புதூர் நாடு முதல் நெல்லிவாசல் நாடு, மலையாண்டிபட்டி முதல் சிங்காரப்பேட்டை வரை தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு, தார்சாலை அளவு மற்றும் தாரின் தரம், ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைகள், மேம்பாலம் ஆகிய பணிகளை பார்வையிட்டார். நேரில் செல்ல முடியாத இடத்தில் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் சென்று பார்வையிட்டார்.

Next Story