சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறுவார் அர்ஜூன் சம்பத் பேட்டி


சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறுவார் அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 8 Jun 2019 4:30 AM IST (Updated: 7 Jun 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறுவார் என்று இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

வேடசந்தூர், 

வேடசந்தூரில் நடந்த இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவில், அந்த கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகளில் இருந்து மணலை அள்ளிச்செல்வதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் விநாயகர் சதுர்த்தியையொட்டி வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலம் நடத்தி அதனை இந்து ஒற்றுமை விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் மாணவர்களை மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது ‘நீட்’ தேர்வு வந்ததால், தேர்வில் வெற்றி பெறும் அனைத்து மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ‘நீட்’ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

‘நீட்’ தேர்வு காரணமாக 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது வருத்தமளிக்கிறது. ஆனாலும் ‘நீட்’ தேர்வால் ஏழை-எளிய மாணவர்கள் பயன்பெறு கின்றனர். தமிழகத்தில் ஆன்மிக வழியில் மாற்று அரசியலை ஏற்படுத்துவதற்காகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிக்க உள்ளார். சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரால் தொடங்கப்படும் கட்சி நிர்வாகிகள் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறுவார்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் கொள்கையும், பா.ஜ.க.வின் கொள்கையும் ஒன்றாக உள்ளது. எனவே அவர் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவார் என நம்புகிறோம். மேலும் நடிகர் கமல்ஹாசன் வெளிநாட்டு என்.ஜி.ஓ.க்களின் உதவியுடன் செயல்பட்டு வருகிறார். திராவிட இயக்கம், இடது சாரிகள் சிந்தனை கொண்டவர். அவரது அரசியல் தமிழகத்தில் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிபாலன், மாநில செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் வெங்கடேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story