கடந்த ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்ட வருவாய் ரூ.750 கோடியாக அதிகரிப்பு கோட்ட மேலாளர் சுப்பாராவ் தகவல்
கடந்த ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்ட வருவாய் ரூ.750 கோடியாக அதிகரித்துள்ளது என்று சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
சூரமங்கலம்,
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 6-ந் தேதி அகில உலக ரெயில்வே கேட் விழிப்புணர்வு நாளாக 40 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களிடையே ரெயில்வே கேட்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். இதுபற்றி சேலம் கோட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
சேலம் ரெயில்வே கோட்டத்தில் 233 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 73 ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன. சேலம் கோட்டத்தில் 30 ரெயில்வே கேட்டுகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயணத்தை எளிதாக்க உள்ளோம்.
இதில் 10 ரெயில்வே கேட்டுகளில் சுரங்க பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று சுரங்கபாதை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். லெவல் கிராசிங்கில் பாதுகாப்பான பயணம் செய்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் ரெயில்வே கேட் கீப்பர்களை சில வாகன ஓட்டிகள் தாக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. ரெயில் கடந்து செல்லும் வரை ரெயில்வே கேட்டை திறக்க முடியாது. இதனால் ரெயில் கடந்து செல்லும் வரை பொதுமக்கள் காத்திருந்து, ரெயில்வே கேட் திறந்த பிறகு செல்ல வேண்டும்.
சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் அத்துமீறி சென்ற இருவேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர். ரெயில் நிலையங்களில் 12 நடைமேடை மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது. அதேபோல் 13 நடைமேடைகளின் உயரம் உயர்த்தப்பட உள்ளது. மேலும், 13 நடைமேடைகளின் நீளம் அதிகரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடையில் மேற்கூரை மற்றும் மின்தூக்கி (லிப்ட்), நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) ஆகியவை நிறுவப்பட உள்ளது. ஈரோடு, திருப்பூர் ரெயில் நிலையங்களில் அனைத்து நடைமேடைகளிலும் நகரும் மின்படிக்கட்டு அமைக்கப்பட உள்ளது.
சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரூ.25 கோடியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர, ரெயில் நிலையத்தில் மேற்கூரை அமைத்தல், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலத்தை அடுத்த சங்ககிரி அருகே மாவேலிப்பாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றபோது, மெதுவாக இயக்கப்பட்ட ரெயில்களில் பயணிகளிடம் நகை திருடியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிர்பயா திட்டத்தில் சேலம் கோட்டத்தில் 8 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. கோவை ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் பணிகள் முழுமையடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் 50 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.
சேலம், ஈரோடு ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். சேலம் முதல் மேட்டூர் வரையிலான பாதையை இருவழி பாதையாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் அனைத்து பணிகளும் நிறைவு பெறும்.
மொரப்பூர்-தர்மபுரி இடையேயான ரெயில் பாதை இணைப்புக்கான ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. குறித்த நேரத்தில் ரெயில்களை இயக்குவதில் 80 சதவீதம் துல்லியமாக உள்ளது. 2018-2019 நிதியாண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தின் மொத்த வருவாய் ரூ.750.75 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 17.85 சதவீதம் அதிகமாகும். கடந்த 2017-2018-ல் வருவாய் ரூ.636.41 கோடியாகும். சரக்கு வருவாய் ரூ.123.54 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 83.29 சதவீதம் அதிகமாகும். பயணிகள் ரெயில் மூலம் ரூ.553.54 வருவாய் கிடைத்துள்ளது. சேலம் கோட்டத்தில் பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ளது. சுமார் 3.94 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். 2019-2020 ஆம் ஆண்டில் கோட்ட வருவாய் இலக்கு ரூ.912 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோட்ட மேலாளர் சுப்பாராவ் கூறினார்.
இந்த பேட்டியின்போது, கோட்ட கூடுதல் மேலாளர் அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், கோட்ட பாதுகாப்பு அலுவலர் கோபி சந்திர நாயக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story