குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்


குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Jun 2019 3:45 AM IST (Updated: 8 Jun 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர்கேட்டு கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள செம்பியநத்தம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த ஆழ்குழாயில் குடிநீர் இல்லாததால், காவேரி குடிநீரை கொண்டு குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்த குடிநீரை முறையாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பணியாளர்கள் திறந்து விடுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செம்பியநத்தம் ஊராட்சி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கரூர்-மணப்பாறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், தாசில்தார் விஜயகுமார் மற்றும் சிந்தாமணிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story