தலைமையாசிரியரை கண்டித்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முற்றுகை-மறியல்
தலைமையாசிரியரை கண்டித்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
லாலாபேட்டை,
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர் கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. தொடர்ந்து நடந்து வரும் பள்ளியின் சீர்கேடு காரணமாக தற்போது 22 மாணவ-மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதனால் அவர்கள் அங்கு சென்று வர சிரமம் ஏற்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று தலைமையாசிரியரை கண்டித்து அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் பழனிசாமி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஊர்பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரை பணியிட மாற்றம் செய்து வேறு ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என்று கையொப்பமிட்டு மனுக்களை அதிகாரியிடம் வழங்கினர். இதையடுத்து அதிகாரிகள் அந்த மனுவை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story