மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சில பகுதிகளில் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.
சமயபுரம்,
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35 கிராம ஊராட்சிகளும், ச.கண்ணனூர், மண்ணச்சநல்லூர் ஆகிய 2 பேரூராட்சிகளும் உள்ளன. இந்த பகுதிகளில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய அன்றாட தேவைக்கும், குடிப்பதற்கும் கூட தண்ணீர் கிடைக்காத காரணத்தால் தனியார் லாரிகள் மூலம் கொண்டு வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ. 5 என பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
குறிப்பாக கிராம ஊராட்சிகளான தீராம்பாளையம், திருப்பைஞ்சீலி, இனாம்கல்பாளையம், இனாம்சமயபுரம் போன்ற ஊராட்சிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் எப்போது வரும் என்று பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைத்து வருகின்றனர்.
பல ஊராட்சிகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அப்பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள கைப்பம்புகளை பராமரிப்பு செய்து, தண்ணீர் தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.
ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தால், தட்டுப்பாடு தீரும் வரையாவது தற்காலிகமாக கூடுதல் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். மின்மோட்டார்கள் மூலம் திருட்டுத்தனமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்தால் மோட்டார்களை பறி முதல் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் பாரபட்சமின்றி எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் தண்ணீருக்காக காலிக்குடங்களை வீதிக்கு தூக்கி வந்து போராட்டத்தில் ஈடுபடும் நிலையை தவிர்க்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story