மாவட்டத்தில் 68 மையங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்குகிறது
திருச்சி மாவட்டத்தில் 68 மையங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்குகிறது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி, பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய தேர்வுகள் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக் கிழமை) என 2 நாட்கள் 68 மையங்களில் நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கான தேர்வு இன்று திருச்சி கல்வி மாவட்டத்தில் 11 மையங்களிலும், லால்குடி கல்வி மாவட்டத்தில் 2 மையங்களிலும், முசிறி கல்வி மாவட்டத்தில் 3 மையங்களிலும், மணப்பாறை கல்வி மாவட்டத்தில் 3 மையங்களிலும் என மொத்தம் 19 மையங்களில் நடை பெறுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கான தேர்வு நாளை திருச்சி கல்வி மாவட்டத்தில் 28 மையங்களிலும், லால்குடி கல்வி மாவட்டத்தில் 6 மையங்களிலும், முசிறி கல்வி மாவட்டத்தில் 8 மையங்களிலும், மணப்பாறை கல்வி மாவட்டத்தில் 7 மையங்களிலும் என மொத்தம் 49 மையங்களில் நடைபெறுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கு விண்ணப்பித்த தேர்வர்கள் அவர்களுக்கு உரிய தேதிகளில் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்தடைய வேண்டும். தேர்வர்களுக்கான பரிசோதனை 8.30 மணிக்கு தொடங்கும். காலை 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட அறை நுழைவு சீட்டில் ஒரு சில வகைகளில் புகைப்படம் இடம் பெறவேண்டிய இடத்தில் தேர்வர்களின் கையொப்பம் இடம் பெற்றிருக்கிறது. தேர்வர்களின் தவறான பதிவினால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அறை நுழைவு சீட்டில் புகைப்படம் உள்ள இடத்தில் கையொப்பம் போன்ற வேறு பதிவுகள் உள்ள தேர்வர்கள் 2 (இரண்டு) புகைப்படங்கள் எடுத்து ஒரு புகைப்படத்தை அறை நுழைவு சீட்டில் ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று அளிக்க வேண்டும். 2-வது புகைப்படத்தை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் வருகைப் பதிவுத்தாளில் ஒட்ட கொடுக்க வேண்டும்.
மேலும், அறை நுழைவுச் சீட்டில் புகைப்படம் சார்ந்த பிரச்சினைக்குரிய தேர்வர்கள் தேர்வு எழுத வரும் போது தம்முடைய அசல் அடையாளச் சான்றாக பான்கார்டு, ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்சு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு மையத்திற்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளுக்கான தேர்வு மையத்தில் ஒன்றாக திருச்சி பாலக்கரை மெத்தடிஸ்ட் மேல்நிலைப்பள்ளியும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு மையம் உறையூரில் உள்ள மெத்தடிஸ்ட் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வர்கள் உறையூர் முகவரியில் உள்ள பள்ளிக்கு செல்லுமாறு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story