வையம்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது அதிகாரிகளுடன், கடைக்காரர்கள் வாக்குவாதம்


வையம்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது அதிகாரிகளுடன், கடைக்காரர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 8 Jun 2019 3:30 AM IST (Updated: 8 Jun 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது அதிகாரிகள் மற்றும் கடைக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உப்பிலியபுரம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 19 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

வையம்பட்டி, 

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நெடுஞ்சாலை ஓரத்தில் மேம்பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அணுகு சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று காலை பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகள் வந்தனர்.அப்போது ஒரு கடையின் முன்புறம் இருந்த ஆஸ்பெட்டாஸ் கூரையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியபோது, கடைக்காரர்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித முன் அறிவிப்பும் செய்யாமல் இப்படி செய்வது நியாயமா?, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால் யாருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது, என்றனர்.

அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனுஷா மனோகரி(வையம்பட்டி), ராமலிங்கம்(மணப்பாறை), போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முதலில் சாலையோரங்களில் உள்ள தரைக்கடைகளை அகற்றிட முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், சாலையோரங்களில் இருந்த தரைக்கடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு வேலி அமைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், உப்பிலியபுரம் பி.மேட்டூரில் அய்யாற்றின் கரையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வந்தனர். இடத்தை காலி செய்து தரும் படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில், நேற்று காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 19 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன், துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story