குடிபோதையில் கார் ஓட்டிய மத்திய அரசு டிரைவர் கைது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய பரிந்துரை
குடிபோதையில் கார் ஓட்டிய மத்திய அரசு டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே.சம்பத் சாலையில் நேற்றுமுன்தினம் மாலையில் மத்திய அரசு நிறுவனத்தின் கார் ஒன்று நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், காருக்குள் உட்கார்ந்திருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள்.
கார் டிரைவர், காரை விட்டு இறங்கி ஓரமாக நின்றுகொண்டிருந்தார். அவரை போலீசார் காரை எடுத்துச்செல்லும்படி கூறினார்கள். ஆனால் கார் ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை. அந்த கார் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. உடனே போலீசார் அவரை பிடிக்க முயன்றனர்.
அதற்குள் காரை எடுத்துக்கொண்டு டிரைவர் வேகமாக சென்றுவிட்டார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காரை மடக்கி டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவரது பெயர் கதிர்வேல் (வயது 38) என்றும், மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை செய்பவர் என்றும் தெரிய வந்தது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் டேனியல்ராஜ் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் அந்த டிரைவர் கதிர்வேல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story