அண்ணாநகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழும் அவலம் சீரமைக்க கோரிக்கை


அண்ணாநகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழும் அவலம் சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2019 4:00 AM IST (Updated: 8 Jun 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலைய அறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது.

பூந்தமல்லி,

அண்ணாநகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுவதால் அங்கு பணிபுரியும் போலீசார், புகார் அளிக்கவரும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் உடனடியாக அவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

போக்குவரத்து போலீஸ் நிலையம்

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டுவரும் அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு தரைதளத்திலும், அதற்கு மேல் தளத்தில் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையம், அண்ணாநகர் துணை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலைய அறையில் அடிக்கடி மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து அங்கு பணியில் இருக்கும் போலீசார் மற்றும் புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் தலையில் விழுவதால் அவர்கள் காயம் அடையும் சூழல் உள்ளது. பல இடங்களில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அவலநிலையும் காணப்படுகிறது.

சீரமைக்க கோரிக்கை

இதனால் அங்கு பணிபுரியும் போக்குவரத்து போலீசார், மேற்கூரை சிமெண்டு பூச்சு எப்போது பெயர்ந்து விழுமோ? என்று பயந்து, பயந்து பணிபுரிகின்றனர். புகார் கொடுக்கவரும் பொதுமக்களும் அதே அச்சத்துடனேயே போலீஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

இந்த போலீஸ் நிலையம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போலீஸ் நிலையத்தின் வெளிப்புற பகுதிகளுக்கு அதிக செலவு செய்து முன்னுரிமை கொடுத்து பராமரிக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீஸ் நிலையத்தின் உள்புறமும் கவனம் செலுத்தி இடிந்து விழும் நிலையில் உள்ள மேற்கூரை சிமெண்டு பூச்சை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story