காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5,814 சிறுவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை கல்வி அதிகாரி தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5,814 சிறுவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை கல்வி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2019 9:18 PM GMT (Updated: 7 Jun 2019 9:18 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5,814 சிறுவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 40 சிறுவர்கள், சித்தாமூர் ஒன்றியத்தில் 58 சிறுவர்கள், காஞ்சீபுரம் ஒன்றியத்தில் 179 சிறுவர்கள், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 156 சிறுவர்கள், குன்றத்தூர் ஒன்றியத்தில் 106 சிறுவர்கள், லத்தூர் ஒன்றியத்தில் 36 சிறுவர்கள், மதுராந்தகம் ஒன்றியத்தில் 34 சிறுவர்கள், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 49 சிறுவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 5,810 பள்ளி செல்லா சிறுவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எல்.கே.ஜி. வகுப்புகள்

இந்த கணக்கெடுப்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் இயலாமைக்கு ஏற்ப பள்ளி ஆயத்த பயிற்சி மையம், நேரடி சேர்க்கை மற்றும் வீட்டு பராமரிப்பில் பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 123 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story