அதிராம்பட்டினம் அருகே சத்துணவு பெண் ஊழியர், கள்ளக்காதலனுடன் தற்கொலை


அதிராம்பட்டினம் அருகே சத்துணவு பெண் ஊழியர், கள்ளக்காதலனுடன் தற்கொலை
x
தினத்தந்தி 8 Jun 2019 3:45 AM IST (Updated: 8 Jun 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் அருகே சத்துணவு பெண் ஊழியர், கள்ளக்காதலனுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் தங்கள் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்யுமாறு எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி கலையரசி(வயது 33). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கலையரசி அதிராம்பட்டினத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், அதே ஊரை சேர்ந்த வீரப்பன் மகன் வடிவேல்(28) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. வடிவேலுக்கு திருமணமாகி சவுந்தர்யா என்ற மனைவியும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கலையரசியின் கள்ளக்காதல் விவகாரம் அவரது கணவர் ஜெயக்குமாருக்கு தெரிய வந்தது. இதனால் அவர் மனைவியை கண்டித்தார். இருப்பினும் கலையரசி–வடிவேலின் கள்ளக்காதல் நீடித்தது. இதனால் வெறுப்படைந்த ஜெயக்குமார் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கலையரசியும், வடிவேலும் வீட்டை விட்டு வெளியேறினர். இதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை, குடும்பத்தினர் தேடினர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ள வயலில் வி‌ஷம் குடித்து வடிவேல் பிணமாக கிடந்தார். அவர் அருகே வி‌ஷம் குடித்த நிலையில் கலையரசி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து கலையரசியை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொண்ட கலையரசியின் கையில் இருந்து ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், தங்கள் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதி வைத்து இருந்தனர்.

இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story