மன்னார்குடியில் அயோடின் இல்லாத 10 ஆயிரத்து 40 கிலோ உப்பு மூட்டைகள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்


மன்னார்குடியில் அயோடின் இல்லாத 10 ஆயிரத்து 40 கிலோ உப்பு மூட்டைகள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Jun 2019 10:30 PM GMT (Updated: 7 Jun 2019 10:04 PM GMT)

மன்னா£ர்குடியில் அயோடின் இல்லாத 10 ஆயிரத்து 40 கிலோ உப்பு மூட்டைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பகுதியில் அயோடின் கலக்காத உப்பு கிடைப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் மணாழகன் தலைமையில், மன்னார்குடி நகரில் உள்ள மளிகை கடை மற்றும் குடோன்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது அயோடின் இல்லாத ரூ.80 ஆயிரத்து 320 மதிப்புள்ள 10 ஆயிரத்து 40 கிலோ உப்பு மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த ஆய்வில் மன்னார்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் அந்தோணிசாமி, துரைசாமி, முருகன், வையாபுரி, பரப்புரையாளர்கள் கார்த்திக், கார்த்திகேயன், மணிகண்டன், விக்னேஷ் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்த உப்பில் இருந்து மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அறிக்கையின் முடிவை பொறுத்து நீதிமன்ற வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட உப்பு மூட்டைகளை நகராட்சி ஆணையர் இளங்கோவன், நகர் நல அலுவலர் டாக்டர் சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் பறநிமுதல் செய்யப்பட்ட உப்பு மூட்டைகளை நகராட்சி ஆணையர் இளங்கோவன் மன்னார்குடி நகராட்சி உரக்கிடங்கில் கொட்டி அழிக்க உத்திரவிட்டார்.

இதுகுறித்து நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் மணாழகன் கூறியதாவது:–

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி தமிழகத்தில் அயோடின் இல்லாத உப்பு தயார் செய்வது, விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அயோடின் காற்று மற்றும் வெப்பத்தினால் கரைந்து விடும் ஆதலால், உப்பு பாக்கெட்டுகளை வெளிப்புறத்தில் வைக்க வேண்டாம் எனவும், அயோடின் இல்லாத உப்புக்களை விற்பனை செய்ய வேண்டாம் என வியாபாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்யவும், ஞாபகசக்தி அதிகரிக்க, கல்வித்திறன் மேம்பட, மனவளர்ச்சி அதிகரிக்க, கரு வளர்ச்சிக்கும் அயோடின் அவசியம். தற்போதைய நிலையில் அயோடின் உப்பில் மட்டுமே கிடைக்கிறது. ஆதலால் பொதுமக்கள் உப்பு பாக்கெட்டின் மீது அயோடின் உள்ளது என வாசகம் உள்ளதா என கவனித்து வாங்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயத்திற்கான உப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கான உப்பை உணவு பொருளாக பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story