‘மாலேகான் குண்டுவெடிப்பு பற்றி தனக்கு எதுவும் தெரியாது’ கோர்ட்டில் ஆஜரான பிரக்யா சிங் எம்.பி. பதில்
மாலேகான் குண்டுவெடிப்பு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கோர்ட்டில் ஆஜரான பிரக்யா சிங் தாக்குர் எம்.பி. கூறினார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகானில் கடந்த 2008-ம் ஆண்டு ஒரு மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நாட்டை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான பிரக்யா சிங் தாக்குர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. அவர்களை கடந்த 2017-ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது.
இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போபால் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட பிரக்யா சிங் தாக்குர் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
கோர்ட்டு எச்சரிக்கை
இந்த வழக்கு விசாரணையின் போது பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர் எம்.பி. உள்பட 7 பேரும் வாரத்தில் ஒரு முறையாவது நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த மே மாதம் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் கடந்த திங்கட்கிழமை மற்றும் நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போதும், பிரக்யாசிங் தாக்குர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. வயிறு கோளாறு காரணமாக அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று அவரது வக்கீல் கூறினார்.
இதையடுத்து ஒரு நாள் மட்டும் விலக்கு அளித்த கோர்ட்டு, விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தது.
எதுவும் தெரியாது
இதையடுத்து, நேற்று கோர்ட்டில் நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது பிரக்யா சிங் தாக்குர் எம்.பி. உள்பட 7 பேரும் ஆஜரானார்கள். பிரக்யா சிங் தாக்குர் தனது உதவியாளர்கள் 2 பேருடன் கோர்ட்டுக்கு வந்து இருந்தார். அவர் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தார்.
அப்போது, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ள அனைவரும் விசாரணையின் போது வாரத்தில் ஒரு முறையாவது ஆஜராக வேண்டும் என நீதிபதி வி.எஸ்.படல்கர் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் இதுவரை 116 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர் மற்றும் சுதாகர் திவேதி ஆகிய இருவரையும் சாட்சி கூண்டிற்கு அழைத்து, மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி கேட்டார். அதற்கு இரண்டு பேரும் தங்களுக்கு குண்டுவெடிப்பு பற்றி எந்த தகவலும் தெரியாது என்று பதிலளித்தனர்.
வழக்கு விசாரணையின் போது நேற்று கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story