விழுப்புரத்தில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளர் கைது
விழுப்புரத்தில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர் சங்கீதமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரம் அருகே குண்டலப்புலியூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றுவதற்காக இடமாறுதல் உத்தரவு மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டது. அதன்படி மணிகண்டன், குண்டலப்புலியூர் டாஸ்மாக் கடையில் பணியாற்றுவதற்காக சென்றார்.
அப்போது அங்குள்ள கடையின் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்த சரவணன் (48) என்பவர், தான் இந்த கடைக்காக ஏராளமான பணம் செலவு செய்துள்ளேன், எனவே இந்த கடையில் பணியில் சேர வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் எனக்கு லஞ்சமாக தர வேண்டும் என்று சரவணன் கூறியுள்ளார்.
அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மணிகண்டன் கூறினார். பணம் கொடுத்தால் மட்டுமே கடையில் பணி செய்ய அனுமதிப்பேன் என்று மேற்பார்வையாளர் சரவணன் கூறினார். இதுபற்றி மணிகண்டன், டாஸ்மாக் அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.
இதையடுத்து மணிகண்டன், சரவணனிடம் சென்று ஒரு மாதத்திற்குள் பணத்தை தருவதாக கூறியதன்பேரில் மணிகண்டனை, குண்டலப்புலியூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்ற மேற்பார்வையாளர் சரவணன் அனுமதித்தார். ஆனால் ஒரு மாதம் கழித்த பிறகும் சரவணனுக்கு மணிகண்டன் பணம் கொடுக்கவில்லை.
இதனால் மணிகண்டனை டாஸ்மாக் கடையில் வேலை செய்ய மேற்பார்வையாளர் சரவணன் அனுமதிக்கவில்லை. அதோடு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே இங்கு பணி செய்ய முடியும் என்று மணிகண்டனிடம் கறாராக கூறிய சரவணன், அந்த பணத்தை விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள தன்னுடைய பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் கடைக்கு நேரில் வந்து தன்னிடம் கொடுக்கும்படி கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை மணிகண்டனிடம் கொடுத்து அதை சரவணனிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள்.
அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று பகல் 12 மணியளவில் மணிகண்டன் எடுத்துக்கொண்டு விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள கடைக்கு சென்று அங்கிருந்த சரவணனிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் சதீஷ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், மூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று சரவணனை கையும், களவுமாக பிடித்தனர்.
அதனை தொடர்ந்து சரவணனை போலீசார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.