கம்பம் சாய்ந்து விழுந்ததில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி


கம்பம் சாய்ந்து விழுந்ததில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
x
தினத்தந்தி 8 Jun 2019 4:15 AM IST (Updated: 8 Jun 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த ஒத்தக்குதிரையை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 42). இவர் கவுந்தப்பாடி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கவுந்தப்பாடி அருகே உள்ள பூலப்பாளையத்தில் புதிதாக மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மின் கம்பியை இழுத்து மின்கம்பத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியில் வெள்ளியங்கிரி மற்றும் மின்வாரிய ஊழியர்களான மின்னவேட்டுவம்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் (53), பூபதி (45) ஆகியோரும் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அவர்கள் 3 பேரும் கம்பத்தில் உட்கார்ந்து மின் கம்பியை இழுத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மின் கம்பம் சாய்ந்து அருகில் இருந்த மின்சாரம் சென்றுகொண்டிருந்த மற்றொரு மின் கம்பத்தில் விழுந்தது.

இதனால் 3 பேரையும் மின்சாரம் தாக்கியது. இதில் வெள்ளியங்கிரி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமலிங்கம், பூபதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 2 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெள்ளியங்கிரி உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story