ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மாநகராட்சி உதவி ஆணையாளர் பணியிடை நீக்கம்


ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மாநகராட்சி உதவி ஆணையாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Jun 2019 4:45 AM IST (Updated: 8 Jun 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மாநகராட்சி உதவி ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை,

கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 32). இவர் தனது வீட்டிற்கு சொத்துவரி கட்ட சொத்துவரி புத்தகம் கேட்டு கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவருக்கு சொத்துவரி புத்தகம் வழங்க ரூ.15 ஆயிரத்தை லஞ்சமாக உதவி ஆணையாளர் ரவிக்குமார் கேட்டார்.

அதற்கு ரூ.12 ஆயிரம் கொடுக்க ஒப்புக்கொண்ட குமார், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை குமாரிடம் கொடுத்து அதை ரவிக்குமாரிடம் கொடுக்க லஞ்சஒழிப்பு போலீசார் கூறினார்கள்.

அதன்படி அதை குமார், ரவிக்குமாரிடம் கொடுத்த போது, அதை தனது உதவியாளரும் இடைத்தரகருமான பாலகிருஷ்ணனிடம் கொடுக்குமாறு கூறினார். அவரிடம் கொடுத்தபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலகிருஷ்ணனையும், ரவிக்குமாரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான அறிக்கை கோவை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரவிக்குமார் மாநகராட்சி மண்டல துணை ஆணையாளராக இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தனி அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே இது தொடர்பான அறிக்கை, தமிழக நகராட்சி நிர்வாக அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். அவர், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

அதன்பேரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ரவிக்குமாரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கடந்த 4–ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கான அறிக்கை நேற்று முன்தினம் கோவை மாநகராட்சிக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து அதற்கான நகல் கோவை மத்திய சிறையில் இருக்கும் ரவிக்குமாரிடம் வழங்கப்பட்டது.


Next Story