நூலகர் இடமாறுதலுக்கு தடை குறித்த வழக்கு: ‘‘நீதித்துறையின் உத்தரவை நீதித்துறையினரே பின்பற்றாதது வேதனையானது’’ மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


நூலகர் இடமாறுதலுக்கு தடை குறித்த வழக்கு: ‘‘நீதித்துறையின் உத்தரவை நீதித்துறையினரே பின்பற்றாதது வேதனையானது’’ மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 7 Jun 2019 11:45 PM GMT (Updated: 7 Jun 2019 11:44 PM GMT)

நூலகர் இடமாறுதலுக்கு தடை குறித்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, நீதித்துறையின் உத்தரவை நீதித்துறையினரே பின்பற்றாதது வேதனையானது என்று கருத்து தெரிவித்தார்.

மதுரை,

தேனியைச் சேர்ந்த திருமலைக்குமாரசாமி. இவர் தேனி மாவட்டத்தில் ஒரு நூலகத்தில் உதவியாளராக உள்ளார். அவரை கடந்த 2010–ம் ஆண்டில் சென்னைக்கு இடமாற்றம் செய்து பொது நூலகத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், இடமாறுதலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டு அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை 2012–ம் ஆண்டில் விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:–

மனுதாரர் நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்று 8 ஆண்டுக்கு மேலாக தேனி அலுவலகத்திலேயே மனுதாரர் பணிபுரிந்து வருகிறார். இடமாறுதல் என்பது பணி விதிகளில் ஒன்று. இடமாறுதல் செய்யப்படும் இடத்தை சம்பந்தப்பட்ட ஊழியர் முடிவு செய்ய முடியாது.

குறிப்பிட்ட சில காரணங்களை காட்டித்தான் இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர முடியும். இடமாறுதல் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீதான நீதித்துறை ஆய்வு சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருக்க வேண்டும். நிர்வாக காரணங்களுக்காக வழக்கமாக செய்யப்படும் இடமாறுதலில் ஐகோர்ட்டு தலையிட்டால் நிர்வாகப்பணிகளில் பாதிப்பு ஏற்படும்.

இதனால் நிர்வாக காரணங்களுக்காக செய்யப்படும் இடமாறுதல்களை எதிர்த்து வழக்கு தொடருபவர்களை ஊக்குவிக்கக்கூடாது. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்று 8 ஆண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மனுதாரர் தனது இடமாறுதல் உத்தரவு நூலக ஆணைய சட்டத்துக்கு எதிரானது எனக் கூறியுள்ளார். ஆனால் பிற அரசு ஊழியர்களுக்கான சலுகையை பெற்று வருகிறார். மனுதாரரின் இந்த இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. இதனால் மனுதாரர் இடமாறுதல் செய்யப்பட்ட இடத்தில் பணியில் சேர வேண்டும். அங்கு பணியிடம் காலியாக இல்லாவிட்டால் மனுதாரரை வேறு இடத்துக்கு 4 வாரத்தில் இடமாறுதல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் இடைக்கால தடையை விலக்கக்கோரி நூலகத்துறை சார்பில் 2012–ம் ஆண்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு வழக்கு எண் வழங்கப்பட்டும் கடந்த 7 ஆண்டில் ஒரு முறை முறை கூட விசாரணைக்கு வரவில்லை. தடையை நீக்கக்கோரும் மனுக்களை வழக்கு எண் வழங்கப்பட்டதில் இருந்து 2 வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அவ்வாறு பட்டியலிடாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இருப்பினும் இந்த உத்தரவை ஐகோர்ட்டு பதிவுத்துறை பின்பற்றவில்லை.

நீதித்துறையின் உத்தரவை நீதித்துறையினரே பின்பற்றாதது வேதனையானது. எனவே தடையை விலக்கக்கோரும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது தொடர்பாக ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவுகளை மதுரை ஐகோர்ட்டு கிளையின் பதிவுத்துறை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story