மாவட்டத்தில் முதல் முறையாக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த 3 வேகக் கண்காணிப்பு கருவிகள்
வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ரூ.27 லட்சத்தில் 3 வேகக் கண்காணிப்பு கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆய்வுசெய்தார்.
வேலூர்,
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அசுரவேகத்தில் செல்கின்றன. இதனால் சில வாகனங்கள் டிரைவர்களின் கட்டுப்பாட்டை இழந்து சாலைகளில் உள்ள தடுப்புகள், பாலங்களில் மோதி விபத்துக்குள்ளாகின்றன. இந்்த விபத்துகளால் உயிர்ப்பலியும் ஏற்படுகின்றன.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் மாவட்டம் வழியாக செல்கிறது. இந்த சாலையில் பல இடங்கள் அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்டு அந்த இடத்தில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்லவேண்டும் என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாகனங்களில் செல்பவர்கள் அதை கவனிக்காமல் வழக்கம்போல அசுர வேகத்திலேயே செல்கின்றனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் வாகனங்கள் செல்லும் வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்த ரூ.27 லட்சத்தில் 3 வேகக்கண்காணிப்பு கருவிகள் (ஸ்பீடு ரேடார் கன்) வாங்கப்பட்டுள்ளது.
இந்த கருவிகள் ராணிப்பேட்டை, பள்ளிகொண்டா, வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்்த கருவி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் வரும் வாகனங்கள் கண்காணிப்பு கருவியில் பதிவாகும். அப்போது வாகனத்தின் பதிவு எண், வாகனம் வரும் வேகம் ஆகியவை அதில் பதிவாகி விடும்.
இந்த வாகனத்தை போலீசார் நிறுத்தி வழக்குப்பதிவு செய்வார்கள். வாகனத்தில் வருபவர்கள் தாங்கள் வேகமாக வரவில்லை என்று வாக்குவாதம் செய்தால் கண்காணிப்பு கருவியில் பதிவானதை பிரிண்ட் எடுத்து காட்டுவார்கள். அதில் வாகனம், பதிவு எண், எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வந்தது என்பது பதிவாகி இருக்கும். அதை வாகன உரிமையாளரிடம் காட்டுவார்கள்.
விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ள இந்த வேகக்கண்காணிப்பு கருவிகளை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
Related Tags :
Next Story