நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு


நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 9 Jun 2019 4:15 AM IST (Updated: 8 Jun 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

‘நீட்‘ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மகள் வைசியா (வயது17). பட்டுக்கோட்டை தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து முடித்திருந்த வைசியா டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ‘நீட்‘ தேர்வு எழுதினார். இந்தநிலையில் கடந்த 5–ந் தேதி வெளிவந்த ‘நீட்‘ தேர்வு முடிவில் வைசியா 720–க்கு 230 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து இருந்தார். குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மனம் உடைந்த வைசியா வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வைசியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர். வைத்திலிங்கம் எம்.பி. நேற்று பட்டுக்கோட்டையில் உள்ள மாணவி வைசியா வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதி உதவியை வழங்கினார்.


பின்னர் வைத்திலிங்கம் எம்.பி. பேசுகையில், நாங்கள் என்றைக்கும் ‘நீட்‘ தேர்வை ஏற்றுக்கொண்டதில்லை. ஏழை–எளிய மாணவ, மாணவிகள் கஷ்டப்பட்டு படித்தும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போவது துரதிர்ஷ்டமாகும். ‘நீட்‘ தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.

அப்போது அவருடன் சி.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலை அய்யன், நகர செயலாளர் சுபராஜேந்திரன், ஒன்றியசெயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் உதயகுமார், கூட்டுறவு சங்க தலைவர் சம்பத், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் பாரதி, பிரபு, ஜி.எம்.பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story